இவர்கள் தேசிய ஒற்றுமைக்குக் கண்டுபிடித்திருக்கும் ஒரே வழி தமிழ், சீனப் பள்ளிகளை எல்லாம் மூடிவிட்டு மலேசியக் குழந்தைகள் அனைவரும் மலாய்ப் பள்ளியில் படிக்க வேண்டும் என்பதுதான்.
இந்தக் கருத்தை அண்மையில் வலியுறுத்தியுள்ளது மலாய் ஆலோசனை மன்றம்.
இது குறித்து தனது எதிர்ப்பை மிகக் கடுமையாகத் தெரிவித்திருக்கிறார் ம.சீ.ச. விளம்பரப் பிரிவின் துணைத் தலைவர் லோ செங் கோ. இப்படிப்பட்ட கருத்தைத் தெரிவித்திருக்கும் மலாய் ஆலோசனை மன்றத்தின் அதிகாரிகளை இன இழிவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என லோ செங் கோ வற்புறுத்தியுள்ளார்.
சீன, தமிழ்ப் பள்ளிகள் கல்விச்சட்டத்தாலும் மலேசிய அரசியல் அமைப்புச் சட்டத்தாலும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
சட்டவிதி 152 (A), அதிகார பூர்வ நோக்கங்கள் தவிர பிற நோக்கங்களுக்காக ஒருவர் தம் மொழியைப் பேசவும் கற்பிக்கவும் எவரும் தடை செய்யக் கூடாது என்று கூறுகிறது. இந்தச் சட்டவிதியின்படி தமிழ், சீனப் பள்ளிகள் அவரவரின் பண்பாட்டு நோக்கங்களுக்காகக் கற்பிக்கப்படும் போது அதனைத் தடுக்க முயலும் மலாய் ஆலோசனை மன்றத்தின் செயல் சட்டப்படிக் குற்றமாகிறது.
தமிழ், சீனப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்கள் தேசியப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடத்திட்டத்தை ஒட்டியே நடத்தப்படுகின்றன. தேசியமொழி முக்கிய பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. தேசிய ஒருமைப்பாடு பற்றியும் இந்த மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றது. இப்பள்ளிகளில் படிக்கும் பிற இன மாணவர்களுக்கு அவர்களின் தாய்மொழியும் கற்பிக்கப்படுகின்றது.
இப்படிப் பார்த்தால் மலாய் ஆலோசனை மன்றத்தில் உள்ள மலாய்க்காரர்கள் போன்றவர்களால்தான் தேசிய ஒருமைப்பாடு சிதைக்கப்படுகின்றது என்றும் லோ செங் கோ கூறினார்.
சபா நாடாளுமன்ற உறுப்பினர் மாக் கோடிங் என்பவர் 1978இல் நாடாளு மன்றத்தில் சீன, தமிழ்ப் பள்ளிகளை மூட வேண்டும் என்று கூறியபோது அவர் தேசிய இன இழிவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டிய லோ, நாடாளுமன்றத்தில் கூட இனஇழிவுச் சட்டத்திற்கு எதிராகப் பேசுவது குற்றமாகிறது என்றார்.
இதே காரணத்தைக் கொண்டு மலாய் ஆலோசனை மன்ற அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று லோ கூறியுள்ளார்.
மலாய் ஆலோசனை மன்றத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி ம.சீ.ச.வும் ம.இ.கா. இளைஞர் பிரிவும் காவல்துறையில் புகார் செய்துள்ளன.
அபத்தம், ஆபத்து
ஒரு பள்ளி முறையால் மட்டுமே தேசிய ஒற்றுமையை உருவாக்க முடியும் என்ற மலாய் ஆலோசனை மன்றத்தின் கருத்து அபத்தமானதும் ஆபத்தானதும் என்று பல முறை விளக்கப்பட்டுள்ளது.
தேசியப் பள்ளிகளில் படிக்கும் மலாயர் அல்லாத மாணவர்கள் தேசிய ஒற்றுமையை ஏன் உருவாக்கவில்லை என்பதும் இடைநிலைப் பள்ளிகளிலும் கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும் எல்லா இனத்தினரும் சேர்ந்துதான் படிக்கிறார்கள். என்றாலும் ஏன் தேசிய ஒருமைப்பாடு இன்னமும் கனவாகவே இருக்கின்றது என்பதும் முக்கியமான கேள்விகளாகும்.
அரசியலமைப்பிலும் நடைமுறையிலும் பள்ளிகள், அரசுத் துறைகள் ஆகிய அனைத்திலும் மலாய்க்காரர், மலாய்க்காரர் அல்லாதாருக்கு வழங்கப்படும் வாய்ப்புகளில் மிகுந்த ஏற்ற இறக்கமும் பாகுபாடும் காட்டப்படுவதால் மலாய்க்காரர் அல்லாதார் கடுமையான விரக்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தேசிய ஒருமைப்பாடோ ஒரே மலேசியாவோ சாத்தியமே இல்லை என்பதை அம்னோ அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
good