Aug 26, 2010

153ஐ எதிர்க்கக் கூடாது: பெரியசாமி உபதேசம்!

தகவல் தொலத்தொடர்பு, கலாச்சார அமைச்சின் சமூக அரசியல் பார்வையாளர் ந. பெரியசாமி ‘ஒரே மலேசியாவின் நிறம் என்ன?’ என்னும் தலைப்பில் மலேசிய நண்பன் 28 ஆகஸ்டு ஞாயிறு ஏடு ஒன்றில் எழுதிய கட்டுரையின் முதல் பகுதி கவனத்துக்குரியது.

ஒரே மலேசியாவின் நிறம் என்ன என்னும் தலைப்பு ஒரே மலேசியாவின் உண்மைப் பொருளை விளக்குவதாக அமைந்துள்ளது.

அக்கட்டுரையின் கீழ்வரும் ஒரு பகுதி கட்டுரையின் சாராம்சமாகவும் ஒரே மலேசியாவின் உண்மை விளக்க மாகவும் அமைந்துள்ளது.

“ ஏன் அரசாங்கம் மலாய்க்காரர்களுக்கு அதிகமான சலுகைகளை வழங்கி வருகிறது. ஏன் மலாய்க்கார மாணவர்களுக்கு கல்வி வசதிகள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது? மலாய்க்காரர்களுக்கு லைசென்சு, பெர்மிட்டுகள் வழங்கி வருகிறது போன்ற பல கேள்விகளை மக்கள் கேட்பதை நாம் அறிவோம். மேற்கூறிய இத்தனை உதவிகளையும் வசதிகளையும் அரசு மலாய்ச் சமூகத்திற்கு வழங்கி வருவது அரசியலமைப்புச் சட்டத்தின் 153 ஷரத்திற்கு உட்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் பூமிபுத்ரா அல்லாத இனத்தவர்களின் நியாயமான தேவைகளுக்கேற்ப வாய்ப்புகளையும் வசதிகளையும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் மிகத் தெளிவாக இந்த ஷரத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்பது இக்கட்டுரையின் முக்கியமான பகுதி.

அரசியலமைப்புச் சட்டம் 153ஆம் பிரிவு மலாய்க்காரர்களுக்கு சிறப்புச் சலுகையை வழங்குகிறது என்பதும் அது மலாய் ஆட்சியாளர்கள் விரும்பும் வரை இருக்கும் என்பதும் மலேசியர் அனைவருக்கும் தெரியும்.

இந்த 153 ஏற்படுத்தியுள்ள சில கருத்தாக்கங்களை நாம் கீழ் வருமாறு பட்டியலிட முடியும்.

1. கடந்த 53 ஆண்டுகளாக அரசியல், கல்வி, பொருளாதாரம், வாணிபம், வேலைவாய்ப்பு போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறப்புச் சலுகையை அனுபவித்த பின்னும் மலாய்க்காரர்கள் இன்னும் ஏழைகளாகவே இருந்தால், இருப்பதாகக் கூறப்படுவதால் இந்தச் சலுகை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.

153இன் விளைவு

2. இந்த 153 இருக்கும் வரை மலேசியக் குடிமக்கள் சிறப்புச் சலுகை பெறுவோர், பெறாதார் என்று இரண்டு தரத்தினராய்தான் இருக்க முடியும். அதாவது முதல்நிலை குடிமக்கள், இரண்டாம் நிலை குடிமக்கள் என்றே மலேசியர் இருக்க முடியும்.

3. இந்தச் சலுகைச் சட்டம் இருக்கும் வரை மலேசியர் அனைவரும் சமம் என்று கூறுவது வெறும் கேலிக்கூத்தே ஆகும். எனவே ஒரே மலேசியா என்பது ஒரே மலாய்க்காரர் என்றே பொருள் தருகிறது. ரக்யாட் டிடாஹுலுகான் என்பதில் வரும் ரக்யாட் மலாய்க்காரர்களை மட்டுமே குறிக்கிறது என்று கருத வேண்டும்.

4. இந்தச் சட்டம் மலாய்க்காரர் அல்லாதாரின் வாழ்வாதார வாய்ப்புகளைப் பின்னுக்குத் தள்ளுவதால் மலேசிய இனங்களுக்கிடையில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் தொடர்ந்து இருக்கும். இதனால் இனங்களுக்கிடையிலான பகையுணர்வு தவிர்க்கப்பட முடியாத ஒன்றாய் ஆகிவிடும்.

5. இந்தச் சட்டம் மலாய்க்காரர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் வெளிநாட்டினரின் முதலீட்டுக்கு மருட்டலாக இருந்து வருவதை மறுக்க முடியாது.

6. மலாய்க்காரர் அல்லாதாரின் வரிப்பணம் 153 சிறப்புச் சலுகையால் மலாய்க்காரர்களுக்கு மட்டும் பயன்படுவதால் மலாய்க்காரர் அல்லாதார் நாட்டை விட்டு வெளியேறுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

7. இந்தச் சட்டம் மலாய்க்காரர்களை முன்னிலைப்படுத்துகிறது. மலேசியாவை முன்னிலைப்படுத்தவில்லை. ஒரு குறிப்பிட்ட இனத்துக்காக ஒரு நாடு அடமானம் வைக்கப்படுகிறது.

ஒன்று முதல் ஏழு வரை சொல்லப்பட்ட இக்கருத்துகளின் அடிப்படையில் முற்போக்கு மலாய்க்காரர்கள் நாட்டை முன்னிலைப்படுத்தி 153ஐ மறுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஊன்றுகோல் சமுதாயமாக…

153 சிறப்புச்சலுகை மலாய்க்காரர்களை ஊன்றுகோல் சமுதாயமாக ஆக்கிவிட்டது என்றும் சுயமாகச் சிந்திக்கவும் உழைத்து வெற்றி பெறவும் முடியாத சமூகமாக மலாய்க்காரர்கள் இருக்கின்றனர் என்றும் வருந்துகின்ற மலாய்த் தலைவர்கள் உருவாகி வருகின்றனர். மலாய்க்காரர்களிடம் இருக்கும் வாக்கு வங்கிகளை இழந்துவிடக் கூடாது என்பதற்காகப் பலர் மெளனமாக இருந்து வருகின்றனர்.

1956இல் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் 54 ஆண்டுகளுக்குப் பின்னும் மாற்றப்படக் கூடாது என்றால் அது உலக அரங்கில் மலேசியாவின் பிற்போக்குத்தனத்திற்கு அடையாளமாகிவிடும். இது நாட்டின் அரசியல் நிலைத்தன்மையையும் பொருளாதார வளர்ச்சியையும் வெகுவாகப் பாதிக்கும்.

ந. பெரியசாமியின் கட்டுரையில் “இந்த நாடு ஒரு மன்னர் ஆட்சிக்குட்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக நாடு’ என்றும் கூறப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஓர் உறுப்பாக இருக்கும் இந்த விதி எல்லாரும் அறிந்ததுதான். உடன் ஜனநாயக நாடு என்றும் கூறப்பட்டுள்ளதை 153வாதிகள் ஏன் “வசதியாக” மறந்துவிடுகின்றனர் என்பதுதான் நமது கேள்வி. ஜனநாயகம் வாக்குரிமை வழங்குவதோடு முடிந்துவிடுகிறதா? அதற்கு மேல் வேறு எந்த உரிமையும் இல்லையா?

சிறுபான்மை மக்களின் ‘நியாயமான தேவைகள்” கவனிக்கப்படும் என்று அரசியல் அமைப்பு கூறுகிறது. ஆனால், எது நியாயமானது, எது தேவையானது என்று அரசியல் அமைப்புச் சட்டம் திட்டவட்டமாகச் சொல்லவில்லை. அல்லது திட்டமிட்டுச் சொல்லப்படவில்லை. ஆகவே எது நியாயமானது என்றும் சிறுபான்மை மக்களுக்கு எது தேவை என்றும் பெரும்பான்மை மக்கள் தங்கள் விருப்பத்திற்கு முடிவு செய்ய முடிகிறது. இதனால் அடிப்படையான குடிமக்கள் உரிமையும் பல வேளைகளில் மனித உரிமையும் மீறப்படுகின்றது.

இதுதான் ஒரே மலேசியாவா? இதுதான் ஒரே மலேசியாவின் நிறமா? ஏன் நீட்டி முழக்கிச் சொல்லுகிறீர்கள்? சுருக்கமாகச் சொல்லிவிடுங்கள்.

“ஒரே மலேசியா என்பது அம்னோவின் மற்றொரு தாரக மந்திரமான ‘கெதுவானான் மெலாயுதான். மலாய்க்காரர் அல்லாதார் இரண்டாம்தர, மூன்றம்தரக் குடிமக்களாய்க் கிடைப்பதை வாங்கிக்கொண்டு இருக்க வேண்டும். தெளிவாகச் சொன்னால் அடிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே மலேசியாவுக்கான விளக்கம்” என்று சொல்லிவிடுங்கள்.

இப்படிச் சொல்லிவிட்டு நாம் எல்லாரும் ஒரே மலேசியாவின் ஒரே குடிமக்கள் என்றும் சொல்லாதீர்கள். இந்த இரண்டுக்குமான முரண்பாடு குருடனுக்கும் தெளிவாகத் தெரிகிறது.

153ம் வேண்டும், ஒரே மலேசியாவும் வேண்டும் என்பது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற பழமொழிக்கு ஒப்பானது என்று அன்பர் பெரியசாமிக்கு நினைவுபடுத்துகிறோம்.

No comments:

Post a Comment

good